வெள்ளி, 30 செப்டம்பர், 2011

டயர் செருப்பு

நான் சிறுவயதில் கிராமத்தில் இருக்கும் போது காலில் முள் குத்தாத இடமே இல்லை எனலாம். மாடு மேய்க்கும்போது . சீமைகருவேலம் விறகு வெட்டும் போது என செய்யும் வேலைகளில் எல்லாவற்றிலும் முள் இருக்கும். எங்கள் வீடு, மாட்டு கோட்டம் ஏன் கிராமமே கருவேலம் மரங்களின் நடுவில்தான் இருக்கும்.

இரப்பர் செருப்பு அந்த முள்ளுக்கு ஏதோ பஞ்சு போல தோணும்போல, பயபுள்ள காலை பதம்பார்க்காம விடாது. ஒருதடவ விறகு வெட்டும்போது கையில் முள்குத்தி ரத்தம் சும்மா பீறீட்டு அடிச்சது. நாங்க படும் பாட்டைபார்த்த எங்க அப்பா, ஒருதடவை உசிலம்பட்டிக்கு மாட்டுக்கு புண்ணாக்கு வாங்கும்போது ஒரு செருப்பை பார்த்து வாங்கிவந்தாரு, அது லாரி டயருல செஞ்சது. கொய்யால செம வெயிட்டு அது, என் வயசுல அத போட்டுக்கு நடக்கமுடியும் ஆனா ஓடமுடியாது. அத போட்டுக்கு மாடுமேய்க்க போனா மாடு நம்மல மேய்ச்சுரும், அதும் சுட்டி கண்ணுக்குட்டிக இருக்கே அது நம்மல ஓடவிட்டே தவிக்கவிடும், அதுவும் இந்த செருப்ப போட்டா அதுக கூட ஒண்ணுமே பண்ணமுடியாது. அதுனால மாடுமேய்க்க இந்த டயர் செருப்பை போடமாட்டேன். 

ஆனா விறகு வெட்ட இத போட்டம்னா நான்தான் அங்க ராசா, பயபுள்ள எந்த முள்ளும் நம்மள தொட முடியாதுல. சர்வ சாதாரணமா ஆளுயர முள்ளுமேல நடக்கலாம். முள்ள விறகு வெட்ட முதலில் சுத்தி இருக்குற சின்ன முல்லுகளை எல்லாம் ஒதுக்கி வழி ஏற்படுத்தி, பிறகு பெரிய விறகுகளை வெட்டனும், அதுலாம் டயர் செருப்பு இல்லாதபோது, இந்த செருப்பு வந்த பிறகு இந்த சின்னப் பயலுகளை காலாலே மிதித்துட்டு, நேரா போய் விறகு வெட்டி எடுத்து வருவோம்.

இதேமாதிரி பள்ளி கூடத்துல கருப்பு கலர்ல ஒரு செருப்பு தந்தாங்க, அது ஒரு நாள் கூட தாங்கல, மாட்டு மேய்க்ககூட உதவல, ஆனா இந்த 20 ரூபா டயர்  செருப்பு வருசகணக்கா இருந்தது என் வீட்டில்.
இந்த டயர் செருப்பு என் வாழ்வை(காலை) காப்பாற்ற வந்த ஒரு....... தெரியல எதோ ஒன்னு....

நேற்று என் குழந்தைகளுக்கு செருப்பு போடும் போது, என் அப்பா அந்த டயர் செருப்பை வாங்கி எங்களுக்கு கொடுத்தபோது வந்த மகிழ்ச்சியான சம்பவம் ஞாபகம்வந்தது.