செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

சுதந்திர நாள் வாழ்த்துக்கள்

இந்தியன்
நீயும் நானும் 
இந்தியன்

நீ பேசும் மொழி எனக்கு தெரியாது
நான் பேசும் மொழி உனக்கு தெரியாது - ஆனாலும்
இந்தியன்

உன் நிலம் வேறு
என் நிலம் வேறு- ஆனாலும்
இந்தியன்

உன் உணவு வேறு
என் உணவு வேறு - ஆனாலும்
இந்தியன்

உன் உடை வேறு 
என் உடை வேறு  - ஆனாலும்
இந்தியன்

உன் பண்பாடு, பழக்கங்கள் வேறு 
என் பண்பாடு, பழக்கங்கள் வேறு  - ஆனாலும்
இந்தியன்

எனக்கு புரியாத மொழியில் 
என் தேசிய கீதம் இருந்தாலும் 
என் கால்கள் எழ வேண்டும் அதற்கு....

இன்று
இந்தியாவின்
விடுதலை நாளாம்
எனக்கு புரியாத மொழியில் நீயும்
உனக்கு புரியாத மொழியில் நானும்
சுதந்திர நாள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வோம் - ஏனென்றால் 
நீயும் நானும் இந்தியன்!!

இப்படிக்கு,
தமிழன் (இந்தியன்) - இதில் எதை அடைப்புக்குறியில் போடுவது???

 


மாடுகளை கொல்லலாம், மாட்டுக்கறி சாப்பிடலாம்

 ஒரு சிலர் மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என்பதற்காக பல கோணங்களில் பல கதைகளை சொல்கிறார்கள். உங்களுக்கு மாட்டுக்கறி பிடிக்கலைனா சும்மா இருங்க, அத விட்டுட்டு மாட்டுக்கு உயிர் இருக்கு, அத வெட்டுனா அதுக்கு வலிக்கும். நம்மெல்லாம் ஆரறிவு உள்ள மனுசங்க, இப்படியெல்லாம் இன்னொரு மிருகத்தை வதைக்ககூடாது... இன்னும் ஏதோதோ.. சொல்றாங்க முடியலப்பா....:) முக்கால்வாசி இப்படி பேசுறவங்க யாரும் மாடோ, ஆடோ கோழியோ வளர்த்துருக்கவே மாட்டாங்க. மாட்டுச்சாணிய மிதிச்சுட்டா காலை மட்டும் காலுவாமா குளிக்கிற ஆளுகளா இருப்பாங்க...

நாங்கெல்லாம் சாப்பிட்டது, படித்தது, உடுத்தியது எல்லாமே மாடும், ஆடும், கோழியும் வளர்த்துதான். மாட்டு பாலை விற்றுத்தான் பள்ளி சென்றோம், மாட்டுச்சாணிய விற்றுத்தான் உடைகள் வாங்கினோம். கோழியை கறிக்கு விற்றுத்தான் புத்தகம் வாங்கினோம். மாடு பால் சும்மா கொடுக்குமா? அதுக்கு பச்சை புல் போடனும், நமக்கு அரிசி சோறு இல்லாட்டினாலும் அதுகளுக்கு நெல் தவிடு போடனும். நம்ம வீட்டை பெருக்குறோமோ இல்லையோ அதுக வீட்டை நாளொன்றுக்கு இரண்டு தடவை சாணியள்ளி சுத்தமா வைக்கணும். எத்தன பேரு மாட்டுக்கு புல் அறுக்க போயி பாம்பு கடி வாங்கியிருக்கோம் தெரியுமோ? நமக்கு உடம்பு சரியில்லைனாலும் சும்மா பொத்தி படுத்துகிட்டு, மாடுகளுக்கு உடம்பு சரியில்லையானா மருத்துவர அழைத்து மருத்துவம் பார்த்து.. மாடு கன்னுக்குட்டி போடும் பொது இரவு முழுதும் கண்முழித்து, ஒரு மாடு நோய்வாய்பட்டு இறந்துச்சுனா கிராமமே துக்கம் விசாரித்து... மாடு, ஆடு கோழி வளர்க்கும் இடம் எவ்வளவு நாற்றம் வரும் தெரியுமா உங்களுக்கு? அய்யா... சொல்ல முடியல.. இவ்வளவு வேலை பார்ப்பது எதற்காக அதுகளுக்கு நாங்க சோறு போடுறோம், அது மூலம் வரும் வருவாயை வச்சு நாங்க சாப்பிடுறோம். அதுக மூலம் வருமானம் வரலைனா மாத்திட்டு வேற மாடோ, ஆடோ வாங்கி எங்கள் வாழ்க்கையை நடத்துகிறோம்.. இங்க எங்கய்யா தொலைஞ்சுபோச்சு மனிதாபிமானம்? மிருகமானாம்? எங்களின் இறந்த மாட்டின் கறிய சாப்பிடும் தோழர்களை எங்கள் வீட்டுக்குள் விடமாட்டார்கள், தண்ணி தரமாட்டார்கள்... இதுல எங்கய்யா இருக்கு உங்க மனிதாபிமான??? உடனே அதுலாம் தப்புதான்... ஆனாலும் மாட்டுக்கறி சாப்பிடுவது பாவம், மாட்டை கறிக்கு விற்க கூடாது என்று சொல்லத்தொன்றினால், உடனே உங்க கைகாசு போட்டு அந்த மாடுகளை வாங்கி "மாடுகளின் முதியோர் இல்லம்" நடத்துங்கள். அதன் மூலம் மாட்டுக்கறி கிடைக்காமா எங்களை போன்றவர்கள் எல்லாம் திருந்தட்டும்.... :)

உங்க கண்ணுகளுக்கு மாட்டுக்கு உயிர் இருப்பது தெரியும்போது ஏன் நெல், பருத்தி போன்ற தாவரங்களுக்கு உயிர் இருப்பது தெரியமாட்டேங்கிறது? உலகில் உயிர் வாழ நீர் அவசியம்.. நீரை குடிக்கும் அனைத்துக்கும் உயிர் இருக்குமல்லவா? அப்புறம் நீங்க எல்லாம் ஏன் தாவரங்களை உண்கிறீர்கள்? உடனே சொல்வார்கள் தாவரங்களை அப்படியே சாப்பிடுவதில்லை அதில் வரும்/விழும் பழங்களையோ.. காய்களையும் தான் உண்ணுவோம் என்று. உங்களுக்கு உடை எப்படி வருகின்றது? பருத்தியில் இருந்து தானே.. சோறு நெல்லில் இருந்தது தானே...? அரிசி என்ன நெல் தாவரம் விளைவிக்கும் பழமா? நெல் பயிரை அரிவாளால் அறுத்து... அதன் கதிரை கல்லில் போட்டு அடி அடி என்று அடித்து, அப்புறம் செல்லை வேகவைத்தோ அல்லது பச்சையாகவோ ஆலையில் போட்டு அரைத்து, அப்புறம் அதனை நீரில் வேகவைத்து தானே உண்கிறீர்கள்.. எது எவ்வவு கொடுமை?  பருத்தி செடியின் பூக்கும் திறன் குறைந்த பிறகும் கூட அதற்கு தண்ணீர் விட்டு வளர்த்தா வருகிறீர்கள்? அதனை உயிருடன் புடிங்கி (ஐயோ கொல்றாங்கன்னு பருத்தி செடி கத்துறது கேட்கலையோ?) போட்டுட்டு அடுத்த பயிரை விதைப்பதில்லை? அது மாதிரிதான் ஆடும், மாடும், கோழியும். ஒரு மாட்டால்  பயனில்லை என்றால் அதனை விற்று விட்டு அடுத்த மாடு வாங்குவது. விற்கும் பொழுது அந்த மாடு எதற்கு பயன்படுமோ அதற்குதான் பயன்டுத்துவார்கள், காசு போட்டு வாங்கி வெறும் சாணியா அள்ளுவார்கள்?

உங்களுக்கு பிடிக்கலேன்னா, உடம்புக்கு சேரலைனா சும்மா இருங்க, அதவிட்டுட்டு மாட்டுக்கு அது இருக்கு, இது இருக்கு, அதுக்கு வலிக்கும். அது பால் தரதால அது தாயை போன்றது என்று கற்பனையில் உளராம... சுகமா, மகிழ்ழ்ச்சியா வாழுங்க...... அடுத்த மனிதனை மதித்து.....


திங்கள், 13 ஆகஸ்ட், 2012

செய்யும் தொழில் தெய்வமாகுமா?

ஒருவன் இவ்வுலகில் வாழத் தேவையான பொருட்களை பெற தனக்கு தெரிந்த அல்லது பிறரால் தெரிவிக்கப்பட்ட தொழிலை செய்து பிழைக்கிறான். அவ்வாறு அவன் பிழைப்புக்காக செய்யும் தொழில் அவனுக்கு தெய்வமாகுமா? ஒரு விவசாயின் மகன் படித்து ஒரு ஆசிரியராகவோ அல்லாதோ ஒரு பிறிதொரு தொழிலை செய்கிறான் என்றால் அவனுக்கு தெய்வம் விவசாயமா அல்லது அவன் தற்பொழுது செய்யும் தொழிலா? அதே போல் தொழில் செய்வதற்கு பயன்படுத்தும் பொருட்களையும் தெய்வமாக பார்ப்பார்கள். அந்த பொருட்கள் மீது கால்(மிதிக்க) வைக்கமாட்டார்கள். உழவு செய்யும் ஏரை உழவன் காலால் மிதித்தால் தானே ஆழமாக உழ முடியும்,  அப்படி என்றால் ஏர் உழவனுக்கு தெய்வமில்லையா?

செய்யும் தொழில் தெய்வம், தொழிற்கருவிகள் தெய்வம் என்று சொல்வது சமூகத்தில் பிறர் செய்ய கூச்சப்படும் தொழிலை செய்ய நிர்பந்திக்கப்பட்ட தொழிலாளர்களை பரம்பரையாக அந்த தொழிலை தொடர சொல்லப்பட்ட ஏமாற்று வித்தையே. அதனை அவரவர்கள் செய்யும் தொழிலுக்கு பயன்படுத்திக் கொண்டார்கள். கணிப்பொறியில் வேலை செய்பவனுக்கு வேண்டுமானால் கணிப்பொறியும் மற்ற பொருட்களும் தெய்வமாக இருக்கலாம். ஆனால் சாக்கடை அல்லும், முடி திருத்தும் போன்ற தொழிலாளர்களுக்கு சாக்கடையும், பிறரின் முடியும் தெய்வமாகுமா? இதன் தொடர்ச்சி தானே ஆயுத பூசை... கணிபொறி போன்ற ஆயதங்களை வீட்டில் வைத்து பூசை பண்ணலாம்.... சாக்கடையும் முடியையும் வைத்து பூசை பண்ணுவார்களா?
இது போன்ற கதைகளை சொல்லியே நம்மையெல்லாம் முட்டாக்கியவர்கள் யாரோ? இதனையே தொடர் கதையாக்கி தொழிலை வைத்து சாதி எனும் நச்சையும் சமூகத்தில் பரப்பிவிட்டனர். அறுபது வயது முடிதிருத்தும் நபரை மற்றொரு சாதியை சேர்ந்த சிறுவன் மரியாதையில்லாமல் வாடா போடா என்று அழைப்பது இந்த "செய்யும் தொழிலே தெய்வம்" எனும் வார்த்தையின்  விளைவே..... முதலில் இதனை ஒழிப்போம்.... 

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

ஈரானில் நிலநடுக்கம் சில அமெரிக்கர்களின் வெறி

கடந்த வாரம் ஈரானில் பெரிய நிலநடுக்கம் வந்து 180 மேற்பட்ட மக்கள் உயிரழந்து பல ஆயிரம் மக்கள் வீடிழந்து தவிக்கின்றனர். இந்த செய்தியை மன வருத்ததுடன் படிக்கும் போது அந்த செய்திக்கு மறுமொழிகளை படிக்கும் போது அந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட வலியை விட அதிகமாக ஏற்பட்டது.

என்னதான் எதிரியாய் இருந்தாலும் ஒரு இயற்கை பேரழிவால் இறக்கும் போது கொஞ்சம் வருத்தம் வரத்தான் செய்யும் அதுதான் ஒரு நல்ல மனித மனத்தின் இயல்பு, ஆனால் சில அமெரிக்க மக்களின் மனதோ எதோ ஒரு பெரிய மகிழ்ச்சியான சம்பவம் நடந்தது போல் குதுகளிக்கின்றனர், இதுவா மனித மனம்?

http://news.yahoo.com/powerful-earthquake-strikes-northwestern-iran-142516556.html  (சுட்டியில் உள்ள மறுமொழிகளை படிக்கவும்)

இரானில் கிட்டத்தட்ட ஒருவருடம்  வசித்துள்ளேன், மிகவும் அன்புடன் பேசும் மக்கள். ஒரு நாள் நாங்கள் டெக்ரானில் உள்ள மலையில் ஏறிக்கொண்டிருந்தோம் அப்பொழுது தாகத்திற்காக ஒரு வீட்டில் தண்ணீர் கேட்டோம் அந்த வீட்டில் இருந்த பெண்கள் மிகவும் அன்புடன் தண்ணீர் தந்தார்கள். நம்மை எல்லாம் பார்த்தவுடன் தெரியும் நாம் வேறு இனத்தவர்கள் என்று, ஆனால் அது மாதிரி ஒரு எண்ணத்தையும் அவர்கள் வெளிப்படுத்தவில்லை. நடு இரவில் கூட பயமில்லாமல் தெருவில் நடந்துள்ளோம். அப்படிப்பட்ட அன்பான மக்களை அவர்களின் மதத்தை கொண்டு எதிரியாக பார்ப்பது மிருகத்தனமே???