மதம், கடவுள், பக்தி மற்றும் அது சார்ந்த விவாதங்களில் ஈடுபடும் போது இறுதியாக வந்து விழும் இடம், அது தனி மனித நம்பிக்கை. இன்னொருவருடைய நம்பிக்கையை பற்றி பேசுவது தவறு. எந்த சாமியை கும்பிடுவது என்பது தனி மனிதனின் விருப்பம் மற்றும் நம்பிக்கையை சார்ந்தது, அதில் மற்றொருவன் தலையிடுவது குற்றம் என்று தான் பதில்கள் வரும். இந்த தனிமனித நம்பிக்கையை பற்றி பேசினால் நிறைய சொல்ல வேண்டி வரும், அதற்கு எனக்கு தெரிந்த பதில் சொல்லத்தான் இந்த பதிவு. (ஆமா இவரு பெரிய ப..ப்பு சொல்ல வந்துட்டார் என்று நினைப்பவர்கள் தான் கட்டாயம் படிக்கணும்....:( ).
மதம், பக்தி என்ற தனி மனித நம்பிக்கையினால் தான் எல்லா மனிதர்களும் தனித்தனியாக கிடக்கிறார்கள். இந்த தனி மனித நம்பிக்கை எப்படி கோடிக்கணக்கான மக்களை ஒன்றாக இணைத்து மதம் என்ற நிறுவனத்தை உருவாக்க முடிந்தது? இந்த தனிமனித நம்பிக்கை எப்படி கடல் கடந்து பல நாட்டு மக்களை மதத்தால்/சாமியால் பிரிக்க முடிந்தது? மதம்/சாமி என்ற தனி மனித நம்பிக்கைதான் நம் சமூகத்தில் சாதி என்ற கொடிய விசத்தை பரப்பி பலரை பிறப்பாலே இழிந்தவர்கள் என்று ஒரு சிலரால் சொல்ல வைக்க முடிந்தது.
ஒரு முப்பது/நாற்பது வருடங்களுக்கு முன்னால் தீபாவளி, பிள்ளையார் சதூர்த்தி போன்ற இந்து பண்டிகைகள் தமிழ்நாட்டில் இல்லை, அது ஒரு சில தன்னை பிறப்பால் மேல் குடி என்று நினைத்து வாழும்/வாழ்ந்து கொண்டிருக்கிற இந்துக்களால் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்தது. முக்கியமாக கிராமங்களில் இந்த விழாக்கள் பிரபலம் கிடையாது. அனால இப்பொழுது பாருங்கள் பிள்ளையாரை துக்கி ஊரணியில் கரைப்பதென்ன, அதனால் வரும் மதச்சண்டை என்ன? இது எல்லாம் தனி மனித நம்பிக்கையாக இருந்து, எப்படி சண்டை போடும் அளவுக்கு வந்தது?
எல்லாக் கிராமங்களிலும் ஒரு ஊர்த் தெய்வம் இருக்கும். அந்த தெய்வம் அந்த ஊரில் உள்ள எல்லா சாதியினருக்கும் பொதுவானதா? இல்லையே. ஒரு சில சாதியினர் மட்டுமே சொந்தம் கொண்டாடுவார்கள். 500/1000 மக்கள் வாழும் சின்ன ஊரிலே இந்த தனிமனித நம்பிக்கை பிளவை உருவாக்குகிறது என்றால், கோடி கோடியாய் வாழும் இவ்வுலகத்தில் எவ்வளவு பிளவுகள் இதனால் உருவாக்கப்பட்டுள்ளது, இன்னும் உருவாக்கப்படுகிறது?
ஒருவன் ஏதாவதொரு துறையில் சாதிக்க வரும் போது அவனுக்கு முன்னால், அந்த துறையில் சாதித்த மனிதனின் வழிகாட்டலின் படியே சென்று சாதிப்பான். அந்த வழிகாட்டல் தனி மனித நம்பிக்கையில்லையா? நான் ஒரு தனி மனிதன் என்னுடைய நம்பிக்கை அது சரியோ/தவறோ என் இளைய தலைமுறைக்கு செல்லுமல்லவா?
நம்ம ஊரில் கபடி, சிலம்பாட்டம் போன்ற நிறைய விளையாட்டுகள் நம் முன்னோர்களால் விளையாடப்பட்டு வந்தது, அது ஏன் இன்று இல்லை. எப்படி கிரிக்கெட் இன்று எல்லோராலும் விளையாடப்படுகிறது? யாரோ ஒருவன்/ஒரு குழு அதுவும் வெளிநாட்டுக்காரன் விளையாடிய விளையாட்டு எப்படி நம்மால் விளையாடப்படுகிறது? அவன் விளையாடியாதைப் பார்த்துதானே நாம் விளையாடுகிறோம். இது தனி மனித நம்பிக்கை பரவுதல் இல்லையா?
விளையாட்டு, கலை, இலக்கியம், தத்துவம் போலத் தான் மதமும் சாமியும். தனிமனித நம்பிக்கை தான் இரு சமூகத்தில் பரவும், அந்த தனி மனிதன் அந்த சமூகத்தில் செல்வாக்கு உள்ளவனகா இருந்தால் அவனால் மற்றவர்களை வற்புறுத்தி அந்த தனிமனித நம்பிக்கை பரப்பமுடியும்.
ஒரு சமூகம் முன்னேற, வளமானதாக இருக்க நாமெல்லாம் முதலில முன் வைப்பது தனிமனித ஒழுக்கம். தனிமனித ஒழுக்கம் இல்லை என்றால் எந்தவொரு சமூகமும் முன்னேற முடியாது. தனி மனித ஒழுக்கம் போலத் தான் இந்த தனி மனித சாமி/கடவுள், பக்தி எல்லாம்.
நம்மில் பலர் புகைப்பிடிக்கும்.மது போன்ற பழக்கங்களை கொண்டுள்ளோம் அது எப்படி நம்மக்கு வந்தது, அடுத்த தனிமனித பழக்கத்தைப் பார்த்துதானே வந்தது, அதே போல தான் இந்த பழக்கங்கள் இல்லாதவர்களும். நான் எனது ஐந்து வயதில் ஒரு அரைகட்டை பீடியை பற்ற வைக்க ஒரு வைக்கோல் படப்பை தீ வைத்துள்ளேன், அந்த எனக்கு எப்படி அந்த அறியாத வயதில் பீடி குடிக்க தோன்றியது, ஏதோ ஒரு தனி மனிதனின் பழக்கம் தானே?
எந்தவொரு தனிமனித நம்பிக்கையும், பழக்கமும் அவன் சார்ந்த சமூகத்தில் பரவத்தான் செய்யும். அந்த பரவுதல் எந்த வகையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பொறுத்துதான் அது மதிக்கப்படும். மதமும் சாமியும் அதன் சார்ந்த பக்தியும் தனி மனித நம்பிக்கை என்றால், அதனால் ஏற்படும் தீய விளைவுகள் அனைவரும் அறிந்ததே. அதனால் பக்தியை தனிமனித நம்பிக்கை என்று சொல்லி ஒதுக்க முடியாது. ஒரு அரசனின் பக்தியின் விளைவு ஒரு நாட்டில் இருக்கும், ஒரு அப்பாவின் பக்தியின் விளைவு அந்த வீட்டில் இருக்கும். அது போல ஒரு தனிமனிதனின் பக்தி அவனின் சக்தியை பொறுத்து விளைவுகளை ஏற்படுத்தும்.
எந்தவொரு தனிமனித நம்பிக்கையும் வெளியில் தெரியும் போது அது விமர்சிக்கப்பட வேண்டும். விவாதிக்கப்பட்டால் தான் தவறுகள் திருத்தப்படும்.
\\மதம், கடவுள், பக்தி மற்றும் அது சார்ந்த விவாதங்களில் ஈடுபடும் போது இறுதியாக வந்து விழும் இடம், அது தனி மனித நம்பிக்கை. \\ உண்மைகளில் இரண்டு விதம் இருக்கு, 1.Relative truth [ஆளாளுக்கு மாறும்], 2. Absolute truth. [ஆளைப் பொறுத்து மாறாது]. உதாரணத்துக்கு, நமக்கு இட்லி, பொங்கல் பிடிக்கும், வட இந்தியர்களுக்கு சப்பாத்தி பிடிக்கும். சிறந்த உணவு எது? இதுதான் சிறந்தது என்று எதையும் சொல்ல முடியாது, இது சாப்பிடுகிறவர்களைப் பொறுத்து மாறும். அதே மாதிரி சிலருக்கு கமலஹாசனைப் பிடிக்கும், சிலருக்கு ரஜினியைப் பிடிக்கும். யார் படம் நல்ல படம்? அது பார்க்கிறவர்களைப் பொறுத்து மாறுகிறது. ரஜினி ரசிகர்களுக்கு ரஜினிப் படம்தான் நல்ல படம், அதே போல கமல் ரசிகர்களுக்கும் சொல்லலாம். இந்த மாதிரி ஆளாளுக்கு மாறும் விஷயங்களை Relative truth எனப்படும். ஆனால், சில உண்மைகள் ஆளைப் பொறுத்து மாறாது. இப்போ, நெருப்பு சுடும் என்பது, ஆளைப் பொறுத்து மாறாது. நான் நெருப்பு சுடாது என்று நினைத்தாலும், நினைக்காவிட்டாலும் அதில் கையை வைத்தால் அது என்னைச் சுடும். சூரியன் கிழக்கே உதிக்கிறது என்பது ஆளைப் பொறுத்து மாறுமா? குருடனாக இருந்தாலும், சூரியன் கிழக்கில் தான் உதிக்கும். மற்றவர்களின் நம்பிக்கையை வைத்து இது மாறப் போவதில்லை. இந்த மாதிரி உண்மைகள் Absolute Truth எனப்படும். அதே மாதிரி, ஒரு குழந்தை இருக்கிறது, அதன் தந்தை ஒருத்தர் இருப்பார். அது யார் என்பது பார்ப்பவர்களைப் பொறுத்து மாறுமா? ஒருத்தர் X-தான் அதன் தந்தை என்கிறார், இன்னொருத்தர் Y என நினைக்கிறார் என்றால், அவரவர் நம்பிக்கையைப் பொறுத்து தந்தை X ஆகவோ Y ஆகவோ இருக்க முடியுமா? முடியாது. அதை பார்ப்பவரின் நம்பிக்கை தீர்மானிக்காது, அதே மாதிரி, கடவுள் தத்துவம் என்பதும் Absolute truth தான் , அது ஒரு மனிதனின் நம்பிக்கையைப் பொருத்த விஷயம் அல்ல அதை அவன் நம்பினாலும் நம்பாவிட்டாலும், தனித்து நிற்கும் Absolute truth ஆகும். அதாவது, உலகம் படைக்கப் பட்டதா இல்லையா, அதைப் படைத்த கடவுள் இருக்காரா இல்லையா, அப்படி இருந்தால் அவர் யார் என்பதெல்லாம் தனி மனிதனின் நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் அல்ல, அதற்க்கு அப்பாற்பட்டு நிறுக்கும் Absolute truth.
பதிலளிநீக்குநன்றி ஜெயதேவ் தாஸ்,
நீக்குநீங்கள் சொல்லும் முழு உண்மை(absolute truth) என்பது தான் அறிவியல், மனிதனின் பகுத்தறியும் உண்மை. அறிவியலால் நிருபிக்க முடியாத ஒன்றை கடவுள் என்பது அறியாமையே. மனிதன் முதற்கொண்டு இந்த உலகம் எப்படி தோன்றியது என்பதற்கு இதுவரை பதில் இல்லை. ஒரு வினாவுக்கு விடை தெரியவில்லை என்றால் கடவுள் என்று பதில் கூறுவது தம்மை தாழ்த்திக்கொண்டு, தனது பிற்கால தலைமுறையையும் சிந்திக்க மறுப்பவர்களாக உருவாக்கும்.
தெரியாது என்பதை தெரியாது என்றே கூறுவோம், அதன் மூலம் பிறரின் தேடல்களை உருவாக்கும், தேடல்களின் மூலம் மனித இனத்தை செழிக்க வைப்போம்.