செவ்வாய், 5 மார்ச், 2013

கள்ளச்சாரயம் அரசும் மக்களும்

எனது பள்ளிப் பருவத்தில் என் கிராமம் மற்றும் சுற்றிலும் உள்ள பகுதிகளில் நிறைய குடும்பங்கள் சாராயம் காய்ச்சி விற்று வந்தார்கள். ஊரிலே சாராயம் கிடைத்தாலும் சாராயம் குடிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தன. குறிப்பாக பள்ளிச்சிருவர்கள் சாராயம் குடிக்க முடியாது. ஏனெனில் சாராயம் விற்பவர்கள் சொந்தக்காரர்களாக/ தெரிந்தவர்களாக இருப்பார்கள். அந்த விற்பனையை தடுக்க போலீசும் நிறைய செய்யும். திரைப்படங்களில் பார்ப்பது போன்று காவல் துறையினருக்கும் சாராயம் விற்பவர்களுக்கும் இடையே பெரிய ஓட்டப் பந்தயமே நடக்கும். நானே நிறைய தடவை பார்த்திருக்கிறேன்.

முட்புதர்களில் சாராய கரைசலை பெரிய மண்பானைகளில் மறைத்து வைத்திருப்பார்கள். அதனை காவல் துறையினர் மோப்பம் பிடித்து வந்து உடைப்பார்கள். மாடு மேய்க்கும் போது கூட்டாஞ்சோறு சமைக்க அந்த கரைசலில் போட்ட மண்டை வெள்ளத்தை (சர்க்கரை)  எடுப்போம். அவ்வளவு எளிதாக எங்களுக்கு சாராயம் கிடைத்தாலும் எங்களால் பள்ளி வயதில் குடிக்க முடியாது. கல்லூரி வந்த பிறகுதான் அதாவது ஊரில் இளைஞன் என்று ஆன பிறகுதான் சாராயத்தை பருக வாய்ப்பு கிடைத்தது. அப்படி குடித்தாலும் மிக ரகசியமாகத் தான் குடிக்க முடியும். குடித்த பிறகும் அந்த ரகசியத்தை காப்பாற்றுவதுதான் பெரிய சாதனையாக இருக்கும். சாராயம் குடிப்பது அவ்வளவு கஷ்டமாக இருப்பதினால் அடிக்கடி குடிக்க முடியாது, ஏதாவது திருவிழா அல்லது குடும்ப விழா என்றால் மட்டும் தான் குடிக்க முடியும்.

பிறகு கள்ளச்சாராயம் ஒழிக்கப்பட்டு தனியார் மது பானைக் கடைகள் வந்தன. முன்னர் சாராயம் எளிதாக கிடைத்தாலும் குடிக்க முடியாது. பின்னர் காசு இருக்காது (படிக்கும் காலத்தில்) அதனால் விழா என்றால் யாரவது வங்கித்தந்தால் மட்டுமே குடிக்க முடியும் என்ற சூழல் வந்தது.

ஆனால் இப்போ?

மக்களை காக்க வேண்டிய அரசே சாராயத்தை விற்கிறது. முன்னர் சாராயம் குடிப்பதே தவறு என்ற மக்கள் குறிப்பாக பெண்கள் மனம் மாறி எப்பவாது குடிக்கலாம் என்ற நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்கள். இந்த மாற்றம் தானாகவா வந்தது. தனியார் கடைகள் சின்ன/பெரிய நகரத்தில் தான் இருக்கும் , அரசு கடைகளோ கிராமத்திற்கு ஒரு கடை என்றளவில் இருக்கிறது. கிராமங்களில் பாதி இளைஞகர்கள் அரசு நடத்தும் மது பானைக் கடைகளில் தான் வேலை செய்கிறார்கள். அதனால் அவர்களுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் மது மிக எளிதாக கிடைத்து அது ஒரு போதை பொருள் என்பதே மறந்துவிட்டது. சாராயம் ஒரு உற்சாக பானம் என்றளவில் வந்துள்ளது. மக்களும் அரசும் அதை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

தன் மக்களை ஒரு அறிவுச் செறிவுள்ள சமுதாயமாக மாற்ற வேண்டிய அரசு மது போதையில் மக்கி போகச் செய்துள்ளது. மக்களும் அந்த போதையில் ஊறி  அது போதை என்பதே தெரியாமல் இருக்கிறார்கள்.

அப்பெல்லாம் சாராயம் குடிக்க ஆத்தங்கரை, ஊரணி என்று ஊரின் ஒதுக்குப் புறமாக சென்று யாருக்கும் தெரியாமல் குடித்துவிட்டு யாருக்கும் தெரியாமல் இருப்போம். இப்பெல்லாம் அவரவர் வீட்டிலேயே குடிக்கிறார்கள். கேட்டால் வெளியில் போய் குடித்து விழுவது அசிங்கம் என்று பதில். சென்னயில் இருக்கும் போது கிண்டி வழியாக அலுவலகத்திற்கு செல்லும் போது பார்த்தேன், காலை ஒன்பது மணிக்கே குடிமகன்கள் வந்து குடிப்பதை அதுவும் அவசரமாக. அவர்களுக்கெல்லாம் போதை என்பது ஒரு மருந்து போல் ஆகிவிட்டது.

சமூகத்தில் பெரும்பாலானவர்கள் போதையில் மூழ்கித் திளைக்கும் போது எப்படி ஒரு அறிவுச் செறிவுள்ள, தன் பிரச்சினைக்கு போராடத் தெரிந்த சமூகத்தை காண்பது? போதையே மருந்தாகும் போது அந்த போதையை வைத்தே அரசியல்வாதிகள் ஆட்சிக்கு வருகிறார்கள், அந்த போதையில் வரும் வருமானத்தை வைத்துதான் ஆட்சியும் நடத்துகிறார்கள். இப்படியே சென்றால் நம் சமூகம் என்னாகும் என்று நினைக்கும் போது ஒரு வித பயம் தான் வருகிறது. இத மாற்றுவது எப்படி????








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக