வெள்ளி, 26 அக்டோபர், 2012

35$ க்கு ஒரு சின்ன லினக்ஸ் இயங்கும் கணிப்பொறி

Raspberry Pi எனும் நிறுவனம் 25$ மற்றும் 35$ டாலருக்கு சின்ன கணிப்பொறி ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த கணிப்பொறியில் லினக்ஸ் இயங்குதளத்தை நிறுவிக்கொள்ளலாம். HDMI & Svideo உள்ளது, இதன் மூலம் டிவியில் இணைத்துக்கொள்ளலாம். 35 டாலருக்கு 512MB அளவு கொண்ட RAM இருக்கும் மற்றும் Network adapter இருக்கும். 25 டாலருக்கு 256MB அளவு கொண்ட RAM இருக்கும், இதில் Network adapter இருக்காது. Python, PHP மற்றும் linux வேலை செய்யும் நபர்களுக்கு மிகவும் உதவிரமாக இருக்கும்.

இதில் இயங்குதளம் SDCard-ல் இயங்கும். குறைந்தது 4GB அளவு கொண்ட SDCard தேவைப்படும். இணைய உலாவி(browser) மிக எளிதான ஒன்றுதான் இருக்கும். Flash & HTML5 கிடையாது. அதனால் வேகமாக அல்லது இணையத்தை மட்டும் பார்ப்பவர்களுக்கு இது மிக மெதுவாக இருக்கும்.  Flash & HTML5  இல்லாததால் YouTube போன்றவற்றை பார்க்கமுடியாது.

Inline image 1

இந்த கணிப்பொறியை பயன்படுத்து வேறு சில கருவிகளை செய்யலாம். விருப்பமுள்ளோர் இந்த இணைய தளத்தை பார்க்கவும்.


http://www.raspberrypi.org/

இதை எழுதி முடிக்கும் போது இந்த செய்தி கிடைத்தது. 99$க்கு உபுண்டு தளம் இயங்கும் கணிப்பொறி.

Parallella: The $99 Ubuntu Supercomputer for Everyone




மதம்/கடவுள் என்பது தனி மனித நம்பிக்கையா?

                         மதம், கடவுள், பக்தி மற்றும் அது சார்ந்த விவாதங்களில் ஈடுபடும் போது இறுதியாக வந்து விழும் இடம், அது தனி மனித நம்பிக்கை. இன்னொருவருடைய நம்பிக்கையை பற்றி பேசுவது தவறு. எந்த சாமியை கும்பிடுவது என்பது தனி மனிதனின் விருப்பம் மற்றும் நம்பிக்கையை சார்ந்தது, அதில் மற்றொருவன் தலையிடுவது குற்றம் என்று தான் பதில்கள் வரும். இந்த தனிமனித நம்பிக்கையை பற்றி பேசினால் நிறைய சொல்ல வேண்டி வரும், அதற்கு எனக்கு தெரிந்த பதில் சொல்லத்தான் இந்த பதிவு. (ஆமா இவரு பெரிய ப..ப்பு சொல்ல வந்துட்டார் என்று நினைப்பவர்கள் தான் கட்டாயம் படிக்கணும்....:( ).

                         மதம், பக்தி என்ற தனி மனித நம்பிக்கையினால் தான் எல்லா மனிதர்களும் தனித்தனியாக கிடக்கிறார்கள். இந்த தனி மனித நம்பிக்கை எப்படி கோடிக்கணக்கான மக்களை ஒன்றாக இணைத்து மதம் என்ற நிறுவனத்தை உருவாக்க முடிந்தது? இந்த தனிமனித நம்பிக்கை எப்படி கடல் கடந்து பல நாட்டு மக்களை மதத்தால்/சாமியால் பிரிக்க முடிந்தது? மதம்/சாமி என்ற தனி மனித நம்பிக்கைதான் நம் சமூகத்தில் சாதி என்ற கொடிய விசத்தை பரப்பி பலரை பிறப்பாலே இழிந்தவர்கள் என்று ஒரு சிலரால் சொல்ல வைக்க முடிந்தது.

                       ஒரு முப்பது/நாற்பது வருடங்களுக்கு முன்னால் தீபாவளி, பிள்ளையார் சதூர்த்தி போன்ற இந்து பண்டிகைகள் தமிழ்நாட்டில் இல்லை, அது ஒரு சில தன்னை பிறப்பால் மேல் குடி என்று நினைத்து வாழும்/வாழ்ந்து கொண்டிருக்கிற இந்துக்களால் மட்டுமே கொண்டாடப்பட்டு  வந்தது. முக்கியமாக கிராமங்களில் இந்த விழாக்கள் பிரபலம் கிடையாது. அனால இப்பொழுது  பாருங்கள் பிள்ளையாரை துக்கி ஊரணியில் கரைப்பதென்ன, அதனால் வரும் மதச்சண்டை என்ன? இது எல்லாம் தனி மனித நம்பிக்கையாக இருந்து, எப்படி சண்டை போடும் அளவுக்கு வந்தது?

                       எல்லாக் கிராமங்களிலும் ஒரு ஊர்த் தெய்வம் இருக்கும். அந்த தெய்வம் அந்த ஊரில் உள்ள எல்லா சாதியினருக்கும் பொதுவானதா? இல்லையே. ஒரு சில சாதியினர் மட்டுமே சொந்தம் கொண்டாடுவார்கள். 500/1000 மக்கள் வாழும் சின்ன ஊரிலே இந்த தனிமனித நம்பிக்கை பிளவை உருவாக்குகிறது என்றால், கோடி கோடியாய் வாழும் இவ்வுலகத்தில் எவ்வளவு பிளவுகள் இதனால் உருவாக்கப்பட்டுள்ளது, இன்னும் உருவாக்கப்படுகிறது?

                      ஒருவன் ஏதாவதொரு துறையில் சாதிக்க வரும் போது அவனுக்கு முன்னால், அந்த துறையில் சாதித்த மனிதனின் வழிகாட்டலின் படியே சென்று சாதிப்பான். அந்த வழிகாட்டல் தனி மனித நம்பிக்கையில்லையா? நான் ஒரு தனி மனிதன் என்னுடைய நம்பிக்கை அது சரியோ/தவறோ என் இளைய தலைமுறைக்கு செல்லுமல்லவா?

                      நம்ம ஊரில் கபடி, சிலம்பாட்டம் போன்ற நிறைய விளையாட்டுகள் நம் முன்னோர்களால் விளையாடப்பட்டு வந்தது, அது ஏன் இன்று இல்லை. எப்படி கிரிக்கெட் இன்று எல்லோராலும் விளையாடப்படுகிறது?  யாரோ ஒருவன்/ஒரு குழு அதுவும் வெளிநாட்டுக்காரன் விளையாடிய விளையாட்டு எப்படி நம்மால் விளையாடப்படுகிறது? அவன் விளையாடியாதைப் பார்த்துதானே நாம் விளையாடுகிறோம். இது தனி மனித நம்பிக்கை பரவுதல் இல்லையா?

                    விளையாட்டு, கலை, இலக்கியம், தத்துவம் போலத் தான் மதமும் சாமியும். தனிமனித நம்பிக்கை தான் இரு சமூகத்தில் பரவும், அந்த தனி மனிதன் அந்த சமூகத்தில் செல்வாக்கு உள்ளவனகா இருந்தால் அவனால் மற்றவர்களை வற்புறுத்தி அந்த தனிமனித நம்பிக்கை பரப்பமுடியும்.

                   ஒரு சமூகம் முன்னேற, வளமானதாக இருக்க நாமெல்லாம் முதலில முன் வைப்பது தனிமனித ஒழுக்கம். தனிமனித ஒழுக்கம் இல்லை என்றால் எந்தவொரு சமூகமும் முன்னேற முடியாது. தனி மனித ஒழுக்கம் போலத் தான் இந்த தனி மனித சாமி/கடவுள், பக்தி எல்லாம்.

                  நம்மில் பலர் புகைப்பிடிக்கும்.மது போன்ற பழக்கங்களை கொண்டுள்ளோம் அது எப்படி நம்மக்கு வந்தது, அடுத்த தனிமனித பழக்கத்தைப் பார்த்துதானே வந்தது, அதே போல தான் இந்த பழக்கங்கள் இல்லாதவர்களும். நான் எனது ஐந்து வயதில் ஒரு அரைகட்டை பீடியை பற்ற வைக்க ஒரு வைக்கோல் படப்பை தீ வைத்துள்ளேன், அந்த எனக்கு எப்படி அந்த அறியாத வயதில் பீடி குடிக்க தோன்றியது, ஏதோ ஒரு தனி மனிதனின் பழக்கம் தானே?

            எந்தவொரு தனிமனித நம்பிக்கையும், பழக்கமும் அவன் சார்ந்த சமூகத்தில் பரவத்தான் செய்யும். அந்த பரவுதல் எந்த வகையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பொறுத்துதான் அது மதிக்கப்படும். மதமும் சாமியும் அதன் சார்ந்த பக்தியும் தனி மனித நம்பிக்கை என்றால், அதனால் ஏற்படும் தீய விளைவுகள் அனைவரும் அறிந்ததே. அதனால் பக்தியை தனிமனித நம்பிக்கை என்று  சொல்லி ஒதுக்க முடியாது. ஒரு அரசனின் பக்தியின் விளைவு ஒரு நாட்டில் இருக்கும், ஒரு அப்பாவின் பக்தியின் விளைவு அந்த வீட்டில் இருக்கும். அது போல ஒரு தனிமனிதனின் பக்தி அவனின் சக்தியை பொறுத்து விளைவுகளை ஏற்படுத்தும்.

 எந்தவொரு தனிமனித நம்பிக்கையும் வெளியில் தெரியும் போது அது விமர்சிக்கப்பட வேண்டும். விவாதிக்கப்பட்டால் தான் தவறுகள் திருத்தப்படும்.


புதன், 24 அக்டோபர், 2012

சரஸ்வதி படிப்புக்கு கடவுள்... அப்புறம் ஏன் அதிகப்படியான மக்கள் படிக்கவில்லை?

பல யுகங்களாக உள்ள இந்து மதத்தில் கல்விக்கென்று  தனிக்கடவுள். அதற்கு பல பெயர்கள்..... அந்த பெயர்களை படிக்கவே பள்ளிக்கூடம் போகணும். இப்படி கல்விக்கு தனிக்கடவுள் வைத்துள்ள இந்து மதத்தில் உள்ள 95% மக்கள் ஏன் படிக்காமல் இருந்தனர்? அவர்களின் படிப்பை யார் தடுத்தது? ஒவ்வொரு புரட்டாதி மாதத்திலும் தவறாமல் சரஸ்வதி பூசை கொண்டாடி வரும் மக்களை ஏன் அந்த சரஸ்வதி படிக்க வைக்கவில்லை?

சிறு வயதில் சரஸ்வதி சபதம் படம் பார்த்து ஒரு ஊமையை தமிழில் பண் இசைக்கும் அளவுக்கு சக்தியுள்ளது கடவுள் என்று நினைத்தோம், வளர்ந்த பிறகு எங்கள் பாட்டன், முப்பாட்டன் என எங்கள் முன்னோர்கள் கல்வி கற்காமல் இருந்ததன் காரணம் என்ன என்று கேட்டால்... சாதி, மதம் என கடவுளின் காரணங்கள் தான் பதிலாக கிடைத்தது. ஏன் இப்படி பொய் கதைகளை சாமிகளை வளர்க்க வேண்டும்?

இந்த கடவுள்தான் நம் முன்னோர்களை கல்வி கற்க வழியில்லாமல் வளர்த்தது. இன்று  தொழில் செய்வதற்கு படித்த அடிமைகள் வேண்டும் என்ற கட்டாய காரணத்தால் எங்களையெல்லாம் பள்ளிக்கு வரவழைத்து விட்டு அந்த கடவுள் தான் எங்களுக்கு கல்வி கொடுத்தது அதனால் அதற்கு விழா எடுத்து கொண்டாடவேண்டும் என்று சொல்வது மொக்கையான களவாணித்தனம். இதையும் புரியாமல் நம் மக்கள் இதனை கொண்டாடி தம்மை தாமே தொலைக்கிறார்கள்.

இந்த கல்விக் கடவுளுக்கு சக்தி இருந்தால் இந்தியாவில் உள்ள அனைவரும் கல்வி கற்றவர்களாக இருக்க வேண்டும். இன்னும் நம்மால் 100% கல்வி கற்ற நாடாக முடியவில்லை, இதுல படிப்புக்கு ஒரு கடவுள் அதற்கொரு விழா... தூ.... அந்த கடவுளும் இல்லை அது வந்து நமக்கு கல்வியையும் கொடுக்கவில்லை. கற்றவன் அடுத்தவனுக்கு கற்றுத் தந்தாலே நாம் அனைவரும் கற்றவர்களாக இருந்திருப்போம். அதை விடுத்துவிட்டு எல்லாத்துக்கும் சாமியை கண்டுபிடிச்சு அதை வைத்து பிழைக்கும்  இந்த .... பிழைப்பை என்னெவென்று சொல்ல?


நவராத்திரி (?)

நவராத்திரி என்றால் என்ன? என்று இணையத்தில் தேடினால் வரும் பதில்களே பல கேள்விகளை தருகிறது. அது போகட்டும் அது என்னவாக இருந்தால் நமெக்கென்ன? எதோ சுண்டல் கிடைத்தால் சரிதான் என்று இருந்தாலும் ஒரு சிலர் நம்மை விடுவதாக இல்லை. ஒரு காலத்தில் மேல்த்தட்டு இந்துக்கள் அதாங்க தெய்வ பாஷை தெரிந்த மக்கள் மட்டும் கொண்டாடி வந்ததை இன்று படித்த வசதியான இந்துக்கள் அதுவும் அந்த தெய்வ பாஷை தெரியாமலே கொண்டாடுகிறார்கள். இது அந்த தெய்வத்துக்கே அடுக்குமா? (இது சத்தியமா தெய்வக்குற்றம் தான்....)

நவராத்திரி பற்றி இணையத்தில் தேடினால் இது பழங்காலந்தொட்டு  வந்த தமிழர்கள் விழாவாம். எப்படியெல்லாம் காதுல(அங்க மட்டுமா?) பூவ சுத்துறாங்க? இது வரையிலும் எங்கள் கிராமத்திலோ இல்ல அதன் சுற்று வட்டாரத்திலோ யாரும் இந்த கொலுவை வச்சதா நான் பார்க்கவும் இல்ல, கேட்கவும் இல்ல. நிலத்தை உழ பயன்படும் கொலுவை பற்றி வேண்டுமானால் பார்த்திருக்கிறேன். இந்த விழாவுக்கும் நமது கிராமத்திற்கும் சம்பந்தமே கிடையாது. அப்புறம் எங்க இது பழங்காலந்தொட்டு வர்றது????

அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல இந்த சாமி தொடர்பான விசயங்கள் மட்டும் அதிக மக்களிடம் மிகவும் எளிதாக சென்றடைகிறது. இதே மாதிரி ஒரு புரட்சி வீரனையோ அல்லது ஒரு சிந்தனையாளரையோ பின்பற்ற சொன்னா நம்மளை கேனைப்பய மாதிரி பாக்குறாய்ங்க. அப்படியே ஒரு சிலர் பின்பற்றினாலும் அது தலைமுறைகளை தாண்டி வருவதில்லை அல்லது அது ஒரு சாதியாகவோ மதமாகவோ மாறுகிறது.

மனிதனுக்கு இந்த சாமி பயம் இருக்கும் வரை, இந்த சாமிதான் நமக்கு சோறு, குழந்தை மற்றும் இன்ன பிற இத்தியாதிகளை தருதுன்னு நினைக்கும் வரை இந்த மாதிரி கொலு, நவராத்திரி என்று இருந்துகொண்டேதான் இருக்கும் பாவம் இந்த பயந்த(பக்தி) மக்கள்.......