புதன், 7 நவம்பர், 2012

தீபாவளி வந்தாச்சு.....


தீபாவளி வந்தாச்சு அதனால எல்லா வியாபாரிகளும் கழிவு/தள்ளுபடி என்று மக்களை ஈர்ப்பார்கள். நாமளும் அடுத்த வீட்டுகாரன் புதுத் துணி உடுத்துவதைப் பார்த்து வாங்குவோம். பக்கத்து வீட்டுக் குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் அதைப் பார்த்து நம் குழந்தைகள் கேட்கும். அதனால் காசு மட்டுமல்ல, குழந்தைகளின் (பட்டாசு தொழிற்சாலைகளில் வேகும் குழந்தைகளின் கைகள்) கைகள் கரியானாலும் பரவாயில்லை வெடி வாங்குவோம். துணி வாங்கியாச்சு, வெடி யும் வாங்கியாச்சு அடுத்தவனைப் பார்த்து, பிறகு என்ன தீபாவளியை கொண்டாட வேண்டியதுதானே? நிற்க..

ஒரு வினாடி யோசியுங்கள்,  அடுத்தவன் கொண்டாடினால் நாமளும் விழா எடுக்கனுமா? குறைந்தது ஏன் இந்த விழா கொண்டாடுகிறார்கள் என்று தெரிந்து கொண்டாவது கொண்டாடலாமே. "தீப வரிசை" தீப ஒளி" என்று அர்த்தம் சொன்னால், நாம் கார்த்திகை மாதம் மூன்று நாட்கள் தீபத் திருநாள் கொண்டாடுகிறோம், அப்புறம் எதற்கு இப்பொழுது ஒன்று? கிராமங்களில் வயதானவர்கள் இருந்தால் கேளுங்கள் தீபாவளியை அவர்கள் சி று வயதில் எப்படி கொண்டாடினார்கள் என்று?


இந்த தீபாவளியை பற்றி பலர் பல காலமாக சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் இந்த பக்தி எனும் விசம் தான் நம் புத்தியை மழுப்பி அடுத்தவர்கள் என்ன செய்தாலும் செய்ய வைக்கிறது. அடுத்தவன் ஆங்கிலத்தில் பேசினால், நானும் பேச வேண்டும், அடுத்தவன் இரு சக்கரம் வைத்திருந்தால் நானும் வாங்க வேண்டும். இப்படி அடுத்தவனை பார்த்தே வாங்கி/பேசி/சாப்பிட்டு பழகிய நம்மை எப்படி மாற்றுவது?

ஏன் நாம் கொண்டாடும் விழாவை, நாம் சாப்பிடும் உணவை, நாம் பேசும் மொழியை அடுத்தவன் பின்பற்ற வேண்டும் என்று நினைக்க மறுக்கிறோம்?

இதுவரையிலும்  அடுத்தவனைப் பார்த்து வாழ்ந்த வாழ்க்கையை நிறுத்தி, ஒரு முறை நமக்காக வாழ்வோமே?

தீபாவளியை பற்றி பாரதிதாசனின் வரிகள்:

மானம் உணரும் நாள்!
நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா?
நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு?
நரகன் என்பவன் நல்லனா? தீயனா?
அசுரன் என்றவனை அறைகின்றாரே?
இராக்கதன் என்றும் இயம்புகின்றாரே?
இப்பெயரெல்லாம் யாரைக் குறிப்பது?

இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்
பன்னுகின்றனர் என்பது பொய்யா?
இவைகளை நாம் எண்ண வேண்டும்.
எண்ணாதெதையும் நண்ணுவதென்பது
படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா?
வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்
கழுத்துப் போயினும் கைக்கொளவேண்டாம்.
ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்
தூயது தூயதாம் துரும்பிரும்பாகாது!
'உனக்கெது தெரியும், உள்ள நாளெல்லாம்
நினைத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா?
என்றுகேட்பவனை, 'ஏனடா குழந்தாய்!
உனக்கெது தெரியும் உரைப்பாய் என்று
கேட்கும் நாள், மடமை கிழிக்கும் நாள், அறிவை
ஊட்டும் நாள் மானம் உணருநாள் இந்நாள்.
தீவாவளியும் மானத்துக்குத்
தீபாவாளி ஆயின் சீ என்று விடுவீரே!

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

இதில் பாரதிதாசன் சொல்லும் (இராக்கதர் )  இராக்கப்பன், இராக்கம்மாள் என்ற பெயர்களில் மனிதர்களும் வாழ்கிறார்கள், சாமிகளும் இருக்கிறார்கள். நாம் தானே அந்த அசுரர்கள்? நம் முப்பாட்டன் இறப்பை நாமே கொண்டாடுவதா?

பாரதிதாசன் கவிதை தொகுப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக