புதன், 7 நவம்பர், 2012

வேலை செய்யும் இடத்தில் தீபாவளி போன்ற மதப் பண்டிகைகளை கொண்டாடுவது சரியா?

பல மதத்தவர், இனத்தவர் ஒன்றாக வேலை பார்க்கும் இடத்தில் தீபாவளி பண்டிகையை மட்டும் கொண்டாடுவது சரியா? அதுவும் குறிப்பாக வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள்(?). அது என்ன இந்தியன் என்றாலே இந்து மட்டும் தான் தெரிகிறது? இந்திய கிருத்துவர்கள், இந்திய இசுலாமியர்கள் போன்ற பிற மதத்தினர் எல்லாம் இந்தியர்கள் இல்லையா?

வெளி நாடுகளில் பல நாட்டினர் ஒன்றாக வேலை பார்க்கும் இடத்தில் இது போன்ற மத விழாக்களை கொண்டாடுவது பிறருக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் அல்லவா? அல்லது எல்லா மத விழாக்களையும் கொண்டாட வேண்டும். அதெப்படி ஒரு இந்து ரம்சான், கிறிஸ்துமஸ் போன்ற பிற மத விழாக்களை கொண்டாடலாம் என்று கேட்கத் தோன்றினால், உங்கள் விழாக்களை உங்கள் வீட்டில் மட்டும் வைத்துக்கொள்ளலாமே?

உயர் பதவில் இருப்பவர்கள் அவர்களுக்கு பிடித்த மத விழாக்களை அலுவலகத்தில் கொண்டாடுவது ஒரு வித சர்வாதிகாரம் தானே? (உயர் பதிவில் இருப்பவர்கள்)அவர்களுக்கு சிங்கி அடிக்கும் கூட்டம் பணம் வசூலிக்க வரும், பணம் தராதவர்கள் அங்கே எதிரியாக பார்க்கப்படுவார்கள். இந்த பொழப்பு தேவைதானா?

இதே மாதிரி தமிழ் சங்கம், தெலுங்கு சங்கம் என்று மொழியின் பெயரால் சங்கம் வைத்து விட்டு அங்கு வெறும் இந்து மத விழாக்கள் மட்டும் கொண்டாடப்படுகிறது. மத விழாக்களை கொண்டாட மதச் சங்கம் என்று பெயர் வைக்கலாமே? ஏன் மொழிச் சங்கம்? அதெப்படி வெளிப்படையா நாங்க மதத்தின் பெயரால் சங்கம் வைத்தால், அடுத்தவர்கள் எங்களை மதவாதிகள் என்று சொல்வார்கள் என்ற கூச்சம்/வெட்கம்... :) அது தானே.

குறைந்தது ஒரு நாட்டினருக்கு பொதுவான விழாக்களை கொண்டாடினால் எல்லாரும் பங்குகொள்வார்கள். ஒரு மத விழாவாக கொண்டாடினால்? சிந்தியுங்கள்...

1 கருத்து: