புதன், 15 பிப்ரவரி, 2012

கல்வி கொடையா? உரிமையா?

ஒரு நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் கல்வி தருவது அந்த அரசின் கடமையா? அல்லது அந்த நாட்டில் இருக்கும் பணக்காரர்கள் போடும் பிச்சையா (கொடையா)? ஒரு சில செய்திகள் படித்தேன் பிரபல சினிமா நட்சத்திரம் ஏழை மாணவர்கள் கல்வி கற்பதற்காக உண்டியல் ஏந்தினார், இன்னொரு விண்மீன்(?) ஒரு இயக்கமே ஆரம்பித்து பணம் வசூலித்து ஏழை மாணவர்களுக்கு படிப்பு கொடுக்குதாம். இப்படி பணக்காரர்கள் தாங்கள் நல்லவர்கள் என்று காட்டிக்கொள்ள செய்யும் இந்த செயல்களால் அவர்கள் கல்வி தந்தை , வள்ளல் என அழைக்கபடுவார்கள். கல்வி என்பது மக்களின் உரிமையாக இல்லாமல் இவர்களின் கொடையாக இருப்பது ஏன்?  இவர்கள் சினிமாவில் கோடி கோடியாக சம்பாதித்து விட்டு சில ஆயிரங்கள் செலவழித்து நல்ல பெயர் வாங்கி, செலவு செய்ததை தாங்கள் நடிக்கும் சினிமா மூலம் வசூல் செய்துவிடுவார்கள். கடைசியில் செலவு செய்து ஓட்டாண்டியாகிறது சாமானிய மக்கள் தான்.இந்த சினிமா நட்சத்திரம், விண்மீன், போன்ற வானத்தில் இருந்து வந்தவர்கள் எல்லோரும் சேர்ந்து, கல்வியை மக்களின் உரிமையாக கிடைக்க போராடினால் என்ன? அதைவிட்டுட்டு உண்டியல் குலுக்கியாவது ஏழைகளுக்கு கல்வி அளிப்பேன் என்று சொல்வது அறிவீனம்.

அரசு, அரசாங்கம், அரசு அதிகாரிகள், அரசியல்வா(ந்)திகள் என பல அடுக்குகள் கொண்ட அதிகார வர்க்கம் நம் அரசாங்கத்தில் உள்ளது, அதன் கடமையே மக்களுக்கு சேவை செய்வதுதானே? நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் வரி, வீட்டு வரி, ரோட்டு வரி என நாம் சுவைக்கும் எல்லாத்துக்கும் வரி கட்டுவது, அந்த வரிப்பணம் எல்லாம் ஒன்று சேர்ந்து மக்களின் அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்யும் என்ற நம்பிக்கையில்தானே? (அந்த நம்பிக்கை இங்கே பொய்த்து பல காலங்கள் ஆகிறது. ) கல்வியும் அடிப்படை தேவைகளில் ஒன்று, அதனை அனைத்து மக்களுக்கும் வழங்குவது அரசாங்கத்தின் கடமையே ஒழியே, மக்களை ஏமாற்றி, ஏழைகளின் உழைப்பில், மக்களின் கண் திறந்திருக்கும்போதே அவர்களின் பணத்தை உருவி(சினமா) பணக்காரர்களாகிய அயோக்கியர்கள் போடும் பிச்சை(கொடை?) இல்லை.

சிந்திப்போம்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக