வியாழன், 8 டிசம்பர், 2011

உறவா பணமா?

வாயை கட்டி வயத்த கட்டி வளர்த்த ஆத்தா அப்பன் வயதான காலத்தில் தனிமையில் இருக்க, வளர்க்கப்பட்ட ஆடுகள் பணத்திற்காக இன்னொரு தேசத்தில் வரிகட்டி வாழ்கின்றன. கால் கிலோ ஆட்டு கறி எடுத்து அதை நமக்கே முழுதும் வைத்துவிட்டு வெறும் குழம்பை குடித்த ஆத்தாவுக்கு என்ன செய்யபோகிறோம்?

சொந்த சகோதரன் திருமணத்திற்கு கூட செல்லமுடியாமல் பணம் சம்பாதித்து யாருக்கு கொடுத்து என்ன செய்யபோகிறோம்?

விவசாய வேலைகள் பார்க்கும் பொழுது இந்த சேத்துக்குள்ள பொழைக்கிறது எங்களோட போகட்டும் என்று எங்கள் கால்களில் சேறு ஒட்டாமல் வளர்த்த பெற்றோர்களுக்கு அவர்கள் வயதானகாலத்தில் என்ன செய்ய போகிறோம்?

நல்ல நாளுக்கு பிள்ளைகளுக்கு மட்டும் புது துணி கொடுத்து, தான் பழையதை கட்டிய ஆத்தாவுக்கு என்ன செய்யபோகிறோம்?

ஒரு பீடியை மூணு முறை அமர்த்தி குடித்து அந்த இருபது பைசாவை சேமித்து பள்ளி கட்டணம் கட்டிய அப்பனுக்கு என்ன செய்யபோகிறோம்?

இங்கே இருக்கும் வசதி தான் பிறந்த ஊரில் இல்லை அதனால் தான் வெளிநாட்டில் இருக்கேன் என்பவர்களிடம் கேட்கிறேன்? இதை  உங்கள் பெற்றோர்கள் நினைத்திருந்தால் நீங்கள் இங்கே வந்திருப்பீர்களா?

பணம் காய்க்கும் மரமாகத்தான் வளர்த்தார்களோ பெற்றோர்கள், பாசத்தையும் காட்டவில்லையோ? தன சுகத்தை தவிர்த்து பிள்ளைகளின் சுகத்திற்காக வாழ்ந்த அந்த வாழும் தெய்வங்களுக்கு என்ன செய்யபோகிறோம்?

ஒரு மனிதனின் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தம் அவன் இறக்கும் பொழுதும், இறந்த பின்னும் தெரியும். தன் விழி திறந்து குழைந்தையை வளர்த்த தாயின் விழி மூடும்போது அந்த குழைந்தைகள் இருக்க வேண்டாமா அல்லது பணமே போதுமா?

மனது வலிக்கிறது..................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக